கேணல் ரமேஷ் விவகாரம்-எஸ்.பி.திஸாநாயக்கவிற்கே தெரியும்

ramesh
ramesh

தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் ரமேஸ் சரணடைந்த வேளை எஸ்.பி.திஸாநாயக்க அவருடன் பேசியதாக தெரிவித்திருந்தார். ஆகவே கோத்தபாய ராஜபக்ஸ முதலில் அவருடன் பேசி அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடமாகாண ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும், கோத்தபாய அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேணல் ரமேஸ் சரணடைந்த வேளை தான் அவருடன் பேசியதாக எஸ்.பி.திஸாநாயக்க சென்ற வருடம் தெரிவித்திருந்தார். ஆகவே கோத்தாபாய ராஜபக்ஸ முதலில் எஸ்.பி.திஸாநாயக்கவுடன் பேசி அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும், சரணடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள். அந்த எண்ணிக்கையை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டுப்பிடிக்க வேண்டும்.

உலகில் போர் நடந்த நாடுகளில் காணாமல் போதல்கள் நடந்துள்ளன, நடக்கின்றன. இங்கும் வடக்கு மற்றும் தெற்கிலும் நடந்துள்ளன.

அதிலிருந்து நாம் மீள முடியாது. கோத்தபாய ராஜபக்ஸ கொடுத்த எண்ணிக்கைக்கும், உண்மையான எண்ணிக்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பதையும் நான் அவதானித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னணி ;-

அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான சிறப்பு இராணுவத் தளபதி தம்பிராஜா துரைராஜசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட கேர்ணல் ரமேஷ் யுத்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி தான் சரணடையப்போவதாகவும் ஆங்கிலத்தில் கூறியதாகவும் 2018 செப்டெம்பர் மாதம் 14ம் திகதி கொழும்பு பொரளை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், எங்களுக்கும் தெரிந்த சிலர் சரணடைந்தனர். ஆனால் அவர்களையும் கொன்றுவிட்டனர் என எஸ்.பி.திஸாநாயக்க கூறியிருந்தார்.

ரமேஷ் சரணடைந்தார், ரமேஷ் கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றும் எந்தவித பொருட்டும் எஸ்.பி. திஸநாயக்க ஊடகவியலாளர் முன்னிலையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.