இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற கோத்தா – மஹிந்த அரசாங்கம்!

unnamed 14 1
unnamed 14 1

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவாகியிருப்பதுடன் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் நிலையில், இந்த அரசாங்கத்தினால் டில்லியின் பாதுகாப்பிற்கும் பொருளாதார ரீதியான ஈடுபாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்று இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆங்கில செய்தி ஊடகமாக ‘எகொனொமி நெக்ஸ்ட்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

ராஜபக்ஷாக்கள் கடந்த காலத்திலிருந்தே சீனாவிற்கு நெருக்கமானவர்களாக இருந்து வந்திருக்கின்ற போதிலும், பிரதமரின் இளைய சகோதரரான கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இந்திய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறார். எனினும் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெய்ஜிங்குடனான தொடர்களை வலுப்படுத்திய தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது இப்போது அனைவரது கண்களும் திரும்பியிருக்கின்றன.

தனது இந்தியப் பெருங்கடலுக்கான ஒரு நங்கூரமாக இலங்கையை மாற்றுவதற்கு சீனா முயற்சிக்கின்றது. எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடக்கம் இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் சீன நீர்மூழ்கிக்கப்பல்களின் சஞ்சாரம் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவிற்கு பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை சீனாவுடனான தனது தொடர்புகளை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. எனினும் டெல்லியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என்று விரும்புகின்றது என்று இந்திய – இலங்கை உறவு தொடர்பான அவதானியொருவர் எகொனொமி நெக்ஸ்ட் ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கிறார். உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் ஊடாக வாழ்த்துச்செய்தியை அனுப்பிவைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.