தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளர் பதவியை ஏற்பதற்கு தயாராகி வரும் இருவர்!

download 1 1
download 1 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளர் பதவியை ஏற்பதற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் புதிய உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதவி வகித்து வருகின்றார்.

இந்நிலையில், சுமந்திரன் அப்பதவியைப் பயன்படுத்தி வரைமுறைகள் அற்று செயற்படுவதாகவும் தம்முடன் கலந்துரையாடல்களின்றி முக்கிய விடயங்களை கையாள்வதாகவும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனையடுத்து, திருகோணமலையில் நடைபெற்ற ரெலோவின் மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் நீடிப்பதற்கு இடமளிப்பதென்றும் ஏனைய செயலாளர் மற்றும் ஊடகப்பேச்சாளர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதென்றும் குறிப்பாக பங்காளிகளையும் உள்ளீர்த்தவாறு அமையவேண்டும் என்று வலியுறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் அல்லது சித்தார்த்தன் ஊடகப்பேச்சாளர் பதவியை வகிப்பதற்கு தயாராகி வருவதாகவும் இந்த விடயத்தில் தங்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தாது விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கு இணங்கி உள்ளதாகவும் இருகட்சிகளின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.