வரிச் சலுகை வாகன அனுமதிப்பத்திரம் கொண்டவர்களுக்கு அரசின் அறிவிப்பு

5 12

வரிச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள அதிகாரிகள் தங்களது விருப்பத்துக்கு அமைய, தங்களது அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி, பதிவு செய்யப்படாத கார்கள்/ கப் வாகனங்களைக் கொள்வனவு செய்ய முடியும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வரிச் சலுகை வாகன அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச் சலுகைக்கு சமமான தள்ளுபடியைப் பெற்று, இலங்கையில் காணப்படும் விற்பனை நிலையங்களில், சந்தை விலையில் வாகனங்களைப் பெறலாம் என அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்து.

28.08.2020 திகதியிடப்பட்ட, 01/2020 எனும் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை சுற்றறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் விதிகளின்படி, வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை சுற்றறிக்கை இல 01/2018 (திருத்தப்பட்ட) மற்றும் பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 22/99 (திருத்தப்பட்ட) ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத, வரிச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனையாளர்கள் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகன இறக்குமதியாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம், குறித்த அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரி நிவாரணத்தின் பெறுமதியை கழிவாக பெற்று, சந்தை விலையில், இலங்கையில் பதிவு செய்யப்படாத ஒரு வாகனத்தைக் கொள்வனவு செய்ய முடியும்.

மேற்படி வரிச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு, வாகனங்களை விநியோகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாகன விற்பனையாளர்கள் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகன இறக்குமதியாளர்கள், எதிர்காலத்தில் தாம் வாகனங்களை கொள்வனவு செய்யும்போது, குறித்த வரிச் சலுகை பெறுமதியை அவர்களுக்கு வழங்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.