கொழும்பில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் சந்திப்பு

mavai
mavai

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகள் கூடி அவர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்வதாக இன்று தீர்மானம் எடுத்த போதிலும் முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழீழ புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படும் கட்சிகள் இன்று பிற்பகல் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே.துரைரட்ணசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உறுப்பினர் ஜனார்தனன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் சித்தார்த்தன உள்ளிட்டவர்கள் கூடி கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.