எமது மக்கள் மீண்டும் அடக்கு முறைக்கு செல்லும் நிலைமை ஏற்படும்; கோவிந்தன் கருணாகரம்

01 4 2

மாகாண சபை தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் எமக்கு கிடைத்த அடிப்படை புள்ளியான மாகாண சபை முறைமை உரிமை கூட எதிர்காலத்திலே இல்லாமல் போகும் நிலமையும் எமது மக்கள் மீண்டும் அடக்கு முறைக்கு செல்லும் நிலைமையும் ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழகத்தில் உயிர் நீத்த விளையாட்டு வீரர்களின் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் வ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கூறியவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

2020ஆம் ஆண்டு தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கே ஒரு பேரிடியாக, சரிவாக, இழப்பாக, நடந்து முடிந்துள்ளது. தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்ந்த பேரினவாத அரசிற்கு சாதகமான, சார்பான ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர்.

அந்த வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள அரசானது தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல, தங்களுக்கு சாதகமானவர்களையே தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள், இனப்பிரச்சினை தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை என்ற வெற்றி மமதையில் உள்ளனர்.

இதேவேளை அமைச்சர்கள் சிலர் மாகாண சபை முறைமையைக் கூட ஒழிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இந்த மாகாண சபை முறைமை என்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டது. இனப்பிரச்சினை தீர்வு விடயத்திற்கு ஆரம்ப புள்ளியாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையானது வடக்கு, கிழக்கு மக்கள் அனுபவித்த பலாபலன்களை விட தெற்கு மக்கள் அனுபவித்த பலா பலன்களே அதிகம் இதனால் தெற்கு மக்கள் இவ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கிழக்கு மாகாண சபையை கைப்பற்றும் என பசில் ராஜபக்ச கூறியுள்ளார். தற்போது 19 ஆவது திருத்த சட்டத்தை நீக்கி 20ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வர வர்த்தமானியில் அறிவித்தல் விடுத்துள்ளனர். அந்த 20ஆவது திருத்த சட்டம் ஒரு குடும்ப ஆட்சியை இராணுவமயமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஏதுவாக அமையப்பெறுகிறது.

எனவே மாகாண சபை முறைமையை தக்க வைக்க வேண்டுமானால் கிழக்கு மாகாண சபையை நாம் கைப்பற்ற வேண்டும். எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்கள் பெற நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டி தேவை இருக்கிறது.

அப்படி இல்லாமல் ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் எமக்கு கிடைத்த அடிப்படை புள்ளியான மாகாண சபை முறைமை உரிமை கூட எதிர்காலத்திலே இல்லாமல் போகும் நிலமையும் எமது மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கு முறைக்கு செல்லும் நிலமை ஏற்படும் என்றார்.

பிரதேசத்தில் உள்ள ஏழு விளையாட்டுக் கழகங்கள் போட்டியில் பங்குபற்றுகின்றன. இவ் நிகழ்வினை ஆரம்பித்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வைத்ததுடன், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் தெரிவித்தார்.