வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதில் பாதிப்பு

SL post 1
SL post 1

எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, தபால் ஊழியர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக 9000 தபால் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்புவதற்காக 8400 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் தபால் அலுவலகங்களுக்கு தேர்தல் நிறைவடையும் வரை பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.