மோடிக்கு பிறந்த தினவாழ்த்து- தொலைபேசியில் கூறிய மஹிந்த-20 நிமிடங்கள் நீடித்த உரையாடல்

மோடி
மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் தனது 70ஆவது பிறந்த நாளை நேற்று (17) கொண்டாடியுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று மாலை 6 மணியளவில் தொலைபேசியூடாக நரேந்திர மோடியைத் தொடர்புகொண்ட இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தனது சார்பிலும் தனது குடும்பம் சார்பிலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு நன்றி தெரிவித்த மோடி, மஹிந்தவின் குடும்பத்தில் புதிய வாரிசாகப் பிறந்துள்ள அவரின் மூத்த புதல்வன் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மகனுக்கும் தனது வாழ்த்துக்களையும் மகிழ்வையும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு தலைவர்களும் பரஸ்பரம், நாட்டு நடப்பு மற்றும் கொரோனா வைரஸின் தற்போதைய நிலைவரம் குறித்தும் தமது உரையாடலில் பகிர்ந்து கொண்டனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.