தமிழ் இளைஞர்கள் போராடுவதற்கு வழிவகுத்தது பெரும்பான்மை தலைவர்களது செயற்பாடே – த.கலையரசன்

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு வழிவகுத்தது பெரும்பான்மை இனத் தலைவர்களது செயற்பாடே என்பதனை அனைவரும் உணர்ந்து; சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியினைச் செய்து தரவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற சேவையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (29) அதிபர் என்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இலங்கையில் வாழுகின்ற மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஆனால், தமிழ் மக்களாகிய எங்களது நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு அரசாங்கமும் அதன் தலைமைகளும் முயற்சி செய்யவேண்டும். எமது மக்களுக்கான உரிமையினை பெறவேண்டும் என்பதற்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோமே தவிர யாருக்கும் எதிராகவும் செயற்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை.

தமிழ் இளைஞர்களை போராட தூண்டுவது பெரும்பான்மை தலைவர்களே!

தமிழ் இளைஞர்கள் போராடுவதற்கு வழிவகுத்தது பெரும்பான்மை தலைவர்களது செயற்பாடே – த.கலையரசன்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 29. September 2020

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் 10 பேர் இருக்கின்றோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசத் தயாரில்லை என்று தெரிவிக்கின்றனர். அதே வேளை 13வது சீர்திருத்தம் நாட்டுக்குத் தேவையில்லை என்று கூறி இன்று புதிதாக 20வது சீர்திருத்தத்தை கொண்டுவரவுள்ளனர்.

இதனால் சிறுபான்மை சமூகம் பாரிய சவால்களை சந்திக்கவேண்டிவரும். தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் ஏற்படுகின்ற பட்சத்தில் அதனைத் தட்டிக்கேட்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தவிர வேறு யாரும் இல்லை என்பதனை எமது மக்கள் உணரவேண்டும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இதனை உணராத மக்கள் அம்பாறை மாவட்டத்தின் மக்கள் பிரதி நிதியினை இல்லாமல் செய்வதற்கு வழிவகுத்தனர் இந்த நிலை எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்தது என்று சிலர் பேசுகின்றனர். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று நாம் விளம்பரம் செய்யவில்லை. இந்த நாவிதன் வெளிப் பிரதேசத்தில் நடைபெற்று இருக்கின்ற அபிவிருத்தி அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமே இடம்பெற்று இருக்கின்றது. இன்று புனரமைக்கப்படுகின்ற நாவிதன்வெளி அன்னமலை வீதி கூட எமது முயற்சியினாலே இடம்பெறுகிறது. இதனையெல்லாம் அறியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனைச் செய்தது எனக் கூறிக் கூறி அம்பாறை மாவட்டத்தின் பிரதி நிதித்துவத்தினை இல்லாமல் செய்துவிட்டனர்.

இன்றைய நிகழ்வில் கௌரவம் பெறுகின்ற அதிபர் சீ.பாலசிங்கன் மற்றும் ஆசிரியர்களின் சேவையானது உண்மையில் இப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாரியளவில் பிரயோசனமாக இருந்தது. அதே போன்று தற்போது இங்கு வந்துள்ள சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்கள் இப்பகுதியில் நேர்மையாக நிருவாகம் செய்கின்ற ஒரு அதிகாரி. அவரையும் இவ்விடத்தில் பாராட்டுகின்றேன். குறிப்பாக கல்வி சம்மந்தமான எந்த விடயமாக இருந்தாலும் அதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது கல்வித் திணைக்கள அதிகாரிகள் சுயாதினமாகச் செயற்பட வழிவிடவேண்டும் என்றார்.