TRCSL ஒப்புதல் இல்லாத அலைபேசி சாதனங்களில் நாளை முதல் சிம் அட்டைகள் இயங்காது!

இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் வழங்கப்பட்டாத அலைபேசி உள்ளிட்ட வலையமைப்பு கொண்ட அனைத்து சாதனங்களும் நாளை தொடக்கம் சிம் அட்டை செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வாடிக்கையாளர்கள் அலைபேசி உள்ளிட்ட வலையமைப்பு சாதனங்களைக் கொள்வனவு செய்யும் போது இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து வாங்குமாறு ஆணைக்குழு கேட்டுள்ளது.

எனினும் தற்போது பாவனையில் உள்ள அலைபேசி உள்ளிட்ட வலையமைப்பு சாதனங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் அட்டைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அலைபேசி உள்ளிட்ட வலையமைப்பு சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையமான http://www.trc.gov.lk வழியாக பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத் துறையில் நடைபெற்று வரும் பன்முக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக சந்தை இடத்தின் நிலமைகளின் அடிப்படையில் தொலைத் தொடர்பு விதிமுறைகள் வேறுபடுகின்றன.

எனவே தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வழங்கிய விற்பனையாளர் உரிமம் வைத்திருக்கும் விற்பனையாளர்களிடமிருந்து சிம் அட்டைகள் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கருடன் வழங்க மட்டுமே தகுதியுடையவர்கள். அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசிகளை நாளை முதல் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை என ஓஷத சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய சிம் அட்டையில் இயங்கும் சாதனம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கரின் நம்பகத்தன்மையை தங்கள் விற்பனையாளர் மூலம் (send SMS to 1909 after typing IMEI<15 digit IMEI number>) சரிபார்க்க முடியும்.

சாதனங்கள் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கதிர்வீச்சை வெளியிடுவதால், போலி அலைபேசிகளை இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க தெரிவித்தார்.

சிம் மூலம் இயக்கப்படும் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் எதிர்காலத்தில் சிம் அட்டை சேவை வழங்குனரால் செயலிழப்புச் செய்யப்படும். அதே நேரத்தில் அத்தகைய உபகரணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.