அதிபரின் இடம்மாற்றத்தை ரத்து செய்ய கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

DSC03823 768x432 1
DSC03823 768x432 1

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி ஒருவரை மதத்தலைவர் ஒருவரின் தலையீடு காரணமா வேறு பாடசாலைக்கு மன்னார் வலயகல்வி பணிப்பாளர் இடமாற்றம் செய்துள்ளமையினை கண்டித்து குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்றைய தினம் (30) காலை பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி பாடசாலையில் கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில் திடீர் என வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றியுள்ளமையினால் குறித்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வலயக்கல்வி பணிமனையினால் எதிர்வரும் 2 ஆம் திகதி குறித்த பாடசாலை அதிபரை வங்காலை பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்ல கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை குறித்த அதிபரை வங்காலை பாடசாலைக்குச் சென்று கையெழுத்திடுமாறு மன்னார் வலயக்கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆரம்ப பாடசாலையின் அதிபரை பாடசாலையை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காது பெற்றோர் பாடசாலைக்கு முன் ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் றொஜன் ஸ்ராலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் கலந்துரையாடினர்.

DSC03824 scaled 1

தற்போது பரீட்சை இடம் பெற்று வரும் நேரத்தில் குறித்த பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியை ஏன் திடீர் என இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் கேள்வி எழுப்பியிருந்ததோடு இப்பாடசாலைக்கு நியமிக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உடனுக்கு உடன் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர் .

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அக்கறை செலுத்தி இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு இப்பாடசாலையின் அதிபரான அருட்சகோதரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.