போதி பூஜை அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

இலங்கை அமரபுர மகாநிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரருக்கு நல்லாசி வேண்டி நேற்று (30) இடம்பெற்ற போதி பூஜை அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.

சுகவீனமுற்றிருக்கும் கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரை சந்தித்து சுகதுக்கங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், தேரர் அவர்களின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தித்தார்.

சங்கைக்குரிய கங்துனே அஸ்சஜி மகா நாயக்க தேரர், சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவங்ச நாயக்க தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த மகாநாயக்க தேரர், சங்கைக்குரிய பல்லேகந்தே ரத்னசார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் கல்கிஸ்ஸ தர்மபாலராம விகாரையில் இந்த அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு படை அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதி பூஜை சங்கைக்குரிய கம்பஹா மகாநாம தேரரினால் நெறிப்படுத்தப்பட்டது.

தம்மாவாச நாயக்க தேரர் பிறந்த ஊரான கம்பஹா கொட்டுகொட கிராமத்தை அண்மித்த ரன்னக்கா குளத்தை புனர்நிர்மாணம் செய்து தருமாறு விவசாய சங்க உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையை தேரர் அவர்கள், ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்தார்

சிவில் பாதுகாப்பு படை அணியின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் விகாரையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.