பாலச்சந்திரன் படுகொலை விவகாரம்: கஜேந்திரனின் உரைக்கு எதிராக சபையில் ஆளுந்தரப்பு, சஜித் அணி கூட்டாகப் போர்க்கொடி

swan
swan

தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா அல்லது  12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட், தண்ணீர்  கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள்  பின்லேடன்களா எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பியதையடுத்து அரச மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் கொதித்தெழுந்தனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம்.பியுமான அநுர பிரியதர்சன யாப்பா, “படையினர் பயங்கரவாதிகளையே அழித்தனர். அவர்கள் ஒரு சிறுவனைக்கூடக் கொன்றதில்லை” எனக் கூறிக்கொண்டிருந்தபோது சபைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், “உறுப்பினரே இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல” என்றார். எனினும், விடாத அநுர பிரியதர்சன யாப்பா, “கஜேந்திரனின் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்” என்றார். இதையடுத்து எழுந்த இன்னும் சில புதுமுக எம்.பிக்கள், “எமது படையினர் ஒருபோதுமே சிறுவர்களைக் கொன்றதில்லை” என்று கூச்சலிட்டதுடன் அவர்களும் கஜேந்திரனின் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்  எனக் கூறியதுடன் கடுமையாகத் திட்டித் தீர்த்தனர்.

எனினும், கஜேந்திரனின் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க உத்தரவிடாத நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், “இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றேன்” என்றார்.

இதையடுத்து எழுந்த முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கஜேந்திரனின் கூற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் பாலச்சந்திரனின் மரணத்துக்கும் படையினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார். இது தொடர்பில் கஜேந்திரன் ஏதோ சொல்ல முயற்சிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சத்தமிட்டு அவரை அடக்கி விட்டனர்.