தபால் மூல வாக்களிப்பு பொதிகள் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிப்பு

election 1
election 1

தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்ற வாக்குச்சீட்டுக்களை உள்ளடக்கிய பாதுகாப்பான பொதிகள் பல தற்போது சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக தபால் திணைக்கள செயற்பாட்டு பிரிவின் பிரதித் தபால்மா அதிபர் ராஜித் ரணசிங்க தெரிவித்துள்ளர்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினம் நேற்றாகும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 69 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமது அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை மாத்திரமே விநியோகிப்பார்கள். இது தவிர தபால் விநியோகம் இடம்பெறாது என்றும் பிரதித் தபால் மா அதிபர் ராஜித் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறும்.

அன்றைய தினத்திலும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகில் உள்ள தபாலகத்திற்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணியில் தமது திணைக்களத்தை சேர்ந்த சுமார் 9 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிசாருக்கும், மாவட்ட செயலக அலுவலர்களுக்கும் இன்றும் நாளையும் தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இந்த இரண்டு தினங்களிலும் தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி இதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்குச் சென்று இவர்கள் தமது தபால்மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.