இனவாதம் பேசி தமிழ்-சிங்கள உறவினை சிதைக்கும் கூட்டமைப்பினர்

IMG 5099
IMG 5099

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாது இனவாதத்தினை பேசி தமிழ்-சிங்கள உறவினை சிதைப்பதாக கவலை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துலிய ரத்தன தேரர் கிழக்கில் தமிழ் மக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தார்.

இந்து, பௌத்த மக்களின் ஒற்றுமைக்காக நான் இங்கு வந்துள்ளேன். அதற்காகவே நான் செயற்பட்டு வருகின்றேன். நான் கடந்த இரு நாட்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்தேன். அங்கு தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தேன். இதன்போது அங்கு வாழும் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறினர். விவசாயிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மக்களுக்கான வீடுகள் இல்லாமல் உள்ளிட பல பிரச்சனைகளும் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கரிசனை காட்டாது பாராளுமனறத்தில் இனவாதத்தினை பேசுகின்றனர். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவிற்கு பாதகத்தினை ஏற்படுத்தி வருகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுத்து முஸ்லிம் மக்கள் சார்பாக செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காது இனவாதத்தை மட்டும் பேசி வருகின்றனர்.

இலங்கையின் எதிர்க் கட்சித்தலைவர் பதவி இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை பேசவே அந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முரண் ஏற்படும் வகையில் இனவாதத்தையே பேசிவருகின்றார். சிரேஸ்ட அரசியல்வாதியான சம்பந்தன் இது குறித்து சிந்திக்க வேண்டும். கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பற்றி கதைக்கவில்லை.

அங்குள்ள மக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்க இராணுவம் கிழக்கில் தளம் அமைக்க முயற்சிப்பது தொடர்பிலும் எதுவும் பேசவில்லை. வெளிநாட்டு சக்திகளுக்கு இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். சஜித்துடன் முஸ்லிம் அடிப்படைவாதிகளே உள்ளனர். இவ்வாறான நிலையில் தமிழ், சிங்கள உறவை ஏற்படுத்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இதற்காகவே நாம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

இதேவேளை ஊடகவியாலாளர்கள் கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வான் வரும் என ரணில் பிரச்சாரம் செய்வது தொடர்பில் கேட்டபோது,

அந்த பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது. நாட்டில் வெள்ளை வான் கலாசாரம் 1988-89ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே உருவானது. அந்த காலத்தில் ரணசிங்க பிறேமதாசவே ஜனாதிபதியாக இருந்தார். ஐந்து மாத காலப்பகுதியில் ஐம்பதாயிரம் இளைஞர்கள் பலியாகினர். போர்க் காலத்தில் கூட இவ்வாறு நடக்கவில்லை. கோத்தபாய ராஜபக்ச நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முற்படுகின்றார். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சிங்கள ஒற்றுமையை பலப்படுத்த அவரை வெற்றியடைய செய்வோம்.

இதேவேளை தேர்தல் முடிவுகள் எவ்வாறு வரினும் தமிழ், சிங்கள உறவினை பலப்படுத்த எமது செயற்பாடு தொடரும். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய இன்னொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், இன்று எம்முன்னால் உள்ள சவால் தமிழ்,சிங்கள மக்களின் உறவை பலப்படுத்துவதே தவிர கோத்தாவுக்கு கருணா, டக்ளஸ், பிள்ளையான் ஆதரவு வழங்குவது என்பதல்ல என்றார்.