நாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தின் பங்களிப்பை வாழ்த்துகின்றார் கோட்டா- 71ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று!

Gotabaya Rajapksha 3
Gotabaya Rajapksha 3

“நாட்டின் இடர் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் இராணுவம் வழங்கி வரும் பங்களிப்புக்கு மதிப்பளிக்கின்றேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டின் ஐக்கியம், இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் நேரடியான மற்றும் வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

அத்துடன் நிற்காமல் தாய் நாட்டுக்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்கள், இடர்களில் இருந்து பாதுகாக்கும் காவல் அரணாகச் செயற்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில், இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்பை நான் மதிப்பாகக் கருதுகின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு , இடர்முகாமைத்துவம் உட்பட அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இராணுவம் வழங்கும் பலம் தொடர்பாகவும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இன்று கொண்டாடப்படும் இலங்கை இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.