நாம் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் – சுதத் சமரவீர

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழு உலகிலும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது.

எனவே, கொரோனா தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது. கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம், அதே நேரத்தில் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டியதும் அவசியம்.

உயர்தர பரீட்சைகள் சுமார் 1 மாத காலத்துக்கு நடைபெறும். எனவே, அதற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் செயற்படுவதை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்புடன் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுத விசேட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்டாலும் மாணவர்கள் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பரீட்சையை எதிர்கொண்டு வெற்றி பெறுவது சவால் மிக்கது என்றார்.