மட்டு. மேய்ச்சல் தரை விடயம் பற்றி சமல் தலைமையில் அவசர கூட்டம்- நிலைமையை ஆராய விசேட குழு நேரில் செல்லும்!

WhatsApp Image 2020 10 23 at 08.39.44
WhatsApp Image 2020 10 23 at 08.39.44

கொழும்பு, பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் மகாவலி காணி தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் பேசப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சுரேன் இராகவன் மற்றும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் கட்டமாக உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர்ச் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாலர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் அடங்கலாக அதிகாரிகள், பண்ணையாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதி எனப் பலரையும் உள்ளீர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் எதிர்வரும் 2ஆம் திகதி குறித்த பிரதேசத்துக்குக் கள விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.