குடிநீரின்றி தவிக்கும் மக்கள்!

Drinking water problem Berhampur ward no 32 residents threaten to boycott election 1
Drinking water problem Berhampur ward no 32 residents threaten to boycott election 1

மட்டக்களப்பு-கரடியனாறு கித்துள் பகுதியில் உள்ள மக்கள் குடிப்பதற்கு கூட குடிநீர் இல்லாமல் வாழ்ந்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

“கித்துள் கிராமத்தில் நாங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு செங்கலடி பிரதேச சபையினால் வாரத்திற்கு இரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இருப்பினும் போதிய அளவு குடிநீர் கிடைக்க பெறுவதில்லை இந்நிலையில் சில சமயம் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இது தொடர்பில் பல அதிகாரிகளிடம் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பில் உள்ள மிகப்பெரிய குளமாக விளங்குகின்ற 61000 ஏக்கர் பரப்புள்ள உன்னிச்சைக் குளம் நாங்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து வெறும் 13 கிலோ மீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது.

இக் குளத்தில் இருந்து பல பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றன. இருப்பினும் எங்கள் கிராமம் போல் பல கிராமங்களில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். குடிநீரின்றி தவிக்கும் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப் படாமல் குடி நீர் நிறைந்த நகர் பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றன. அரசாங்கம் ஏன் எங்களுக்கு இந்த குடிநீரை தர மறுக்கின்றது? அரசாங்கத்தின் இந்த செயல் மிகுந்த வேதனை அளிக்கின்றது.

மழை காலத்தில் ஓரளவு எங்கள் நீர் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்கிறோம். ஆனால் கோடை காலத்தில் வெகுதூரம் கால்நடையாக சென்று நீரைப் பெற்றுக்கொள்கிறோம். அப்பொழுதுகூட முதலில் ​செல்வோருக்குதான் நீர் போதிய அளவில் கிடைக்கின்றது. எனவே எங்கள் இன்னல்களை புரிந்து கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என அவர்கள் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .