கொரோனா உப கொத்தணி தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் விடுத்த எச்சரிக்கை!

பேலியகொடை கொரோனா கொத்தணியை விட பாரிய அளவிலான கொரோனா கொத்தணி ஒன்று உருவானால் சுகாதார அமைப்புக்கு அதனை தாங்கிக்கொள்ள சக்தி இல்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் கடுமையான அசௌகரிய நிலைமைக்கு நாடு தள்ளப்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் எமக்கு பதிவாகியுள்ள நோயாளர்களில் உப கொத்தணிகள் சிலவும் காணப்படுகின்றன.

மினுவாங்கொடை கொத்தணியில் இது ஆரம்பமானது. அதன் பின்னர் கொழும்பு கப்பல் துறை கொத்தணி. மத்துகம அகலவத்தை பிரதேசத்தில் கொத்தணி ஒன்று உருவானது. குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கொத்தணி ஒன்று உருவானது. கஹதுடுவ பிரதேசத்தில் தற்போது அவதான நிலை ஏற்பட்டுள்ளது..

இவ்வாறு பல உப கொத்தணிகள் உருவாகிய வண்ணம் உள்ளன. பேலியகொடை கொத்தணி போன்று மேலுமொரு கொத்தணி உருவானால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்றார்.