இன்று வெளியாகவுள்ள நிர்ணய அரிசி விலைக்கான வர்த்தமானி அறிவித்தல்!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு இன்று முற்பகல் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைய, மொத்த விற்பனையாளர்களுக்கு அரிசியை விநியோகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்துள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மொத்த விற்பனை நிலையங்களுக்கு செல்பவர்கள், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேவேளை, வெலிசறை பொருளாதார மையத்தில், மொத்த விற்பனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மையங்கள் மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுபாடுகள் எதுவும் இல்லை என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜீ.இளமநாதன் தெரிவித்தார்.