10 ஆயிரம் பெறுமதியான உணவு பொதி வழங்க நடவடிக்கை

2e2f36e618a7217de6b60a6edeaff9c4 XL 720x450 1
2e2f36e618a7217de6b60a6edeaff9c4 XL 720x450 1

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 2 வாரங்களுக்கு அவசியமான, 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் இருக்குமாயின், அந்த இரண்டு குடும்பங்கள் தொடர்பில் கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தல் இருக்குமாயின், குறித்த இரண்டு குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும்.

இவ்வாறான நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி கிடைக்கவில்லையாயின், பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகருக்கோ அல்லது பொது சுகாதார பரிசோதகருக்கோ அறிவிக்க வேண்டும்.

அத்துடன், 0112 369 139 என்ற கொழும்பு மாவட்ட செயலகத்திற்கோ அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கோ அறிவிக்க முடியும் என்றும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

5 ஆயிரத்து 800 இற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.