சில முக்கிய பிரமுகர்கள் மாத்திரம் கொரோனா தடுப்பூசியை பெறுகின்றனர்- நளின் பண்டார

நாட்டிலுள்ள சில முக்கிய பிரமுகர்கள் சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நளின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய பலர் உயிரிழந்துள்ள போதிலும், பிரேத பரிசோதனைகளின் பின்னரே அவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.

இது போன்ற அச்சுறுத்தலான நிலைமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முழு நாடும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்திற்கு இது வசந்த காலமாக மாறியுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களை, நாட்டுக்கு அழைத்த வருவது குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றது.

அவர்கள் நாட்டிற்கு வருவதற்காக பயணசீட்டை பெறுவதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிடவேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்தவுடன், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், தனிமைப்படுத்தல் நிலையங்களாக ஹோட்டல்கள் பயன்படுத்தப்படும் போது, ஹோட்டல் உரிமையாளர்கள் ஆளும் தரப்பினருடைய ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இலாபம் ஏற்படுத்தி கொடுக்கும் செயற்பாடாக அந்த முயற்சி அமைந்திருக்கின்றது.

சுகாதார அமைச்சர் மக்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதிப்பதாகவும், மந்திர நீர் நிரப்பப்பட்ட நீரை ஆற்றில் கலந்தும் நாட்டு மக்களுக்கு மூட நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார்.

ஆனால், பிரபுக்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள, தடுப்பூசிகளை 70 தொடக்கம் 140 டொலர்கள் செலவில் பெற்றுக்கொண்டு பயன்படுத்தி கொள்வதாக தெரியவந்துள்ளது.

பிரபுக்களின் குடும்பத்தினர் எந்த தடுப்பூசிகளை பயன்படுத்தினாலும் எமக்கு சிக்கல் இல்லை . மாறாக நாட்டு மக்களுக்கும் அந்த வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டும்.

ஆளும் தரப்பினருக்கு மக்கள் மீது உள்ள அக்கறையைவிட தங்கள் மீதே அக்கறை அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.