அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் இலங்கைக்கும் சாதகமான நிலைமை – சஜித் பிரேமதாச

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், ஒட்டுமொத்த உலகுக்கும் சாதகமான நிலைமை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனாவினால் இன்று பலரது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், சிறுகைத்தொழிலாளர்கள், தினமும் உழைப்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று ஒட்டுமொத்த நாடே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக எதிர்க்கட்சி என்றவகையில், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் நாம் குரல் கொடுப்போம்.

அதேநேரம், இன்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இலங்கைக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் அரசாங்கத்தைவிட, தற்போது அமையவுள்ள அரசாங்கத்தால் உலகுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என்றே நாம் நம்புகிறோம்.

இதனை எமது நாடும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் சிறப்பான கொள்கையுடன் நாம் பயணிக்கவேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேலும் பலப்படுத்தவேண்டும். நாட்டின் இறையான்மையை பாதிக்காத ஒப்பந்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.