நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விசேட விவாதம்!

download 2 9
download 2 9

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனை 19 நாட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வரவு – செலவுத்திட்டத்தின் முதலாம் வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அத்துடன், இந்த மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதாம் 10 ஆம் திகதி நிறைவுபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அன்றைய தினம் பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது சபை அமர்வுகள், தினமும் 9.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 5.30 வரை முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும், நவம்பர் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முற்பகல் 9.30 முதல் முற்பகல் 10.30 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், நவம்பர் 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்காக முற்பகல் 9.30 முதல் முற்பகல் 10 மணி வரை நேரம் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்‌ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை நடாத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரேரணை எதிர்வரும் 13 ஆம் திகதி 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.

மேலும், நாளைய தினம் 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் என்பன மாத்திரமே இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மதியபோசன இடைவேளை இன்றி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.