ஆன்மீக விடயங்களில் காவல்துறையினர் செய்த செயல் கண்டிக்கத்தக்கது – மயூரக்குருக்கள்

ஆன்மீக விடயங்களில் காவல்துறையினர் செய்த செயல் கண்டிக்கத்தக்கது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், மதகுருவுமான சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் குறித்து ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலாகாலமாக எமது இந்து மக்களின் வாழ்வோடு சேர்ந்த விழாக்கள் அனைத்தும் பாரம்பரியமாகவும் வாழ்வியல் ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பது எமது ஆத்மார்த்தமானதும் அறிவியலின் சிந்தனைகளுக்கு ஆரம்பமாகவும் இருந்து வருகின்றது.

எமது வாழ்வியலையும் சமயசம்பிரதாய சடங்குகளினையும் முதலிலே அனைவரும் தெரிந்து கொண்டிருப்பது நல்லது. அல்லது அதனைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ளாதிருப்பது அவர்களுக்கு நல்லது. கார்த்திகைத் தீபத்திருநாளில் விளக்கேற்ற கூடாது என்று மறுப்பதற்கு காவல்துறையினருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. அவர்கள் என்ன முற்றும் உணர்ந்து, முற்றும் துறந்த ஆன்மீக வழிகாட்டிகளாக நினைத்து கொண்டுள்ளார்களோ?

கார்த்திகை மாதம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு இந்துக்களுக்கும் புனிதமான நாட்களும் விஷேடமான நாட்களும் வரும் மாதம் கார்த்திகை மாதம் பிறந்தாலே அந்த மாதம் முழுவதுமே வழிபாட்டிற்குரிய மாதமாகும். காவல்துறையினருக்கு பயந்தோ அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கு பயந்தோ நாங்கள் என்றைக்கும் எம் வழிபாட்டு முறைகளை மாற்றவோ திருத்திக்கொள்ளவோ அல்லது தவிர்க்கவோ அவசியம் இல்லை. நாங்கள் யார் விடையங்களிலும் மூக்கை நுழைப்பதில்லை அதனை அவர்கள் விளங்கி கொள்ளட்டும் நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் காணப்படுகிறது.

அன்றாடம் பல குற்றச் செயல்கள், கடத்தல்கள் என்பன நடைபெறுகிறது. அவற்றை அதை முதலில் சீர்செய்யப் பாருங்கள். அதனை விடுத்து ஆன்மீக விடையங்களில் தலையிட உங்கள் யாருக்கும் எவ்வித உரிமைகளோ அதிகாரங்களோ கிடையாது. உங்கள் வீட்டில் கருகுவதை திருத்தப்பாருங்கள் அடுத்தவர் வீட்டில் அவிவதை பார்க்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் ஆன்மீகம் என்பது நாம் பிறக்கும் போதே இணைந்து பிறக்கிறது. அதனில் கைவைக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என தெரிவித்தார்.