காலி அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது தம்புள்ளை அணி!

win momentkt 678x381 2 720x450 1
win momentkt 678x381 2 720x450 1

லங்கா பிரீமியர் லீக் எனப்படும் (எல்.பி.எல்.)இருபதற்கு இருபது தொடரில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும் காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய காலி கிளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தனுஷ்க குணதிலக்க 46 ஓட்டங்களையும் செஹான் ஜயசூரிய 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில், தசுன் சானக, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தில்சான் மதுசங்க 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சமினுல்லா ஷின்வாரி ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் அஞ்சலோ பெரேரா 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலி அணியின் பந்துவீச்சில், தனஞ்சய லக்ஷான் 2 விக்கெட்டுகளையும் லக்ஷான் சந்தகான், செஹான் ஜயசூரிய மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 20 பந்துகளில் 6 பவுண்ரிகள் 2 சிக்ஸர்கள் அடங்களாக ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சமினுல்லா ஷின்வாரி தெரிவுசெய்யப்பட்டார்.