இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

sl vs pak
sl vs pak

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் – பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இந்தப் போட்டி பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமைதாங்குகின்றார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி கராச்சியில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போதும், முதல் முறையாக இரு அணிகளதும் சம்மதிப்புடன் டெஸ்ட் தொடரொன்று ஆரம்பமாகிறது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரையில் 53 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் 19 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 16 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில், 18 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அத்துடன், பாகிஸ்தானில் இரண்டு அணிகளும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், பாகிஸ்தான் அணி 8 போட்டிகளிலும், இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டு அணிகளும் நிலைத்து நிற்கவும், புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தை காணவும் இந்த தொடர் ஒரு முக்கியமான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.