தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது !!

1 1
1 1

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3க்கு0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது, இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதமும், ரகானே சதமும் விளாசினர்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவின் அசுர பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்களில் சுருண்டது. 335 ரன்கள் பின் தங்கி அந்த அணி பாலோ ஆன் ஆகவே, இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. முகமது சமி, உமேஷ் யாதவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

தியூனிஸ் டி ப்ரூயின், டேன் பைட், லிண்டே போன்ற பின்வரிசை வீரர்கள் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தனர். நேற்று மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. இன்று போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் நோர்ஜே, லிண்டே ஆகியோர் ஆட்டமிழக்கவே தென்னாப்பிரிக்கா அணி 133 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 3க்கு0 என்ற கணக்கில், டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது.