பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

1 student
1 student

பெங்களூருவின் எலச்சனஹள்ளியில் உள்ள பி.யூ. கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயிலும் 16 வயது பூமிகா, தினமும் கல்லூரிக்கு கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தையே பயன்படுத்தி வருகிறார். அதற்காக அவர் மாணவ-மாணவிகளுக்கான பேருந்து சலுகைக் கட்டண அட்டையையும் வைத்துள்ளார். அவரது வீடு கனகபுராவில் உள்ளது.

சம்பவத்தன்று எலச்சனஹள்ளியில் இருந்து கனகபுராவுக்குச் செல்ல பேருந்தில் ஏறிய பூமிகாவை பயணச்சீட்டு வாங்கும்படி நடத்துநர் கூறினார். பூமிகா தன்னிடம் மாணவர்களுக்கான சலுகைக் கட்டண அட்டை உள்ளது என்று கூறி அதை எடுத்து காண்பித்தார்.

அப்போது இந்தப் பேருந்துக்கு சலுகைக் கட்டண அட்டை செல்லாது என்றும் பயணச்சீட்டு வாங்கவேண்டும் என்றும் கூறிய நடத்துநரிடம், அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொள்வதாக பூமிகா தெரிவித்தார்.

இதற்கு ஒப்புக்கொள்ளாத ஓட்டுநர், ஓடும் பேருந்திலிருந்து பூமிகாவைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பூமிகாவின் பற்கள் உடைந்தன. மேலும் நெற்றி உள்பட சில இடங்களில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

அந்த பகுதியில் இருந்தவர்கள் பூமிகாவை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் இம்மாதம் 11ஆம் தேதி நடந்தது.

சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பூமிகா சம்பவம் குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

பூமிகாவைக் கீழே தள்ளிய நடத்துநரின் பெயர் சிவசங்கர் என்பதும், அவர் ஆரோஹள்ளி டெப்போவில் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசாத், “மாணவி சென்ற பேருந்தில் சலுகைக் கட்டண அட்டையைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியைக் கீழே தள்ளியது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட நடத்துநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

சம்பவத்தின் தொடர்பில் போலிசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.