தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெறும்!

admk6 1576253555
admk6 1576253555

2021 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 198 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பீடு செய்யப்பட்ட ஆய்வு செய்தியொன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம்,

அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது

திமுக 31.6 %

காங்கிரஸ் 6.4 %

பாமக 5.3 %

தேமுதிக 2.4%

பாஜக 2.8%

சிபிஐ 0.8%

சிபிஎம் 0.7%

வி.சி.க 0.8%

த. மா. க 0.5%

மதிமுக 0.9%

IMUL 0.7%

எம்.எம்.கே 0.5%

புதிய தமிழகம் 0.5%

தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரித்தால், அதிமுக, பாமக, பாஜக, தமாகா ஆகியவை சேர்த்து மொத்தம் 49.9%.

அதேசமயம் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், வி.சி.க, மதிமுக, ஐ.யூ.எம்.எல், எம்.எம்.கே சேர்த்து மொத்தம் 42.4%

இது அதிமுக கூட்டணிக்கு நேரான வெற்றியாகத் தெரிகிறது.

ஆனால் 2016 க்கு பின்னரான விளைவுகளால் அதாவது கமலின் மக்கள் நீதி மய்யம், அதிமுக, திமுக இரண்டு பக்கமும் 2% சதவித வாக்கை பிரிக்கும். 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார். அதே போல நாம் தமிழர் கட்சியின் சீமானும் இரண்டு பக்கமும் 2% சதவித ஓட்டை பிரிப்பார். இவரும் 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார். பாஜகவின் வாக்கு சதவிகிதம் 6% முதல் 10% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறைநிலையாக 6% மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இப்போது புதிய கணக்குகளைக் கணக்கிட்டால்,

அதிமுக மொத்தம் 49.4

கழித்தல்

கமல் -2%

சீமான் -2%

நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்

மொத்தம் – 9%

இப்பொழுது

அதிமுக 49.4 – 9 = 40.4%

அதிமுக 40.4%

கூட்டல்

பாஜக + 6%

அதிமுக இறுதி

40.4 + 6 = 46.4

அதிமுக மொத்த வாக்கு சதவிகிதம் 46.4%

தற்போது திமுக கூட்டணியைப் பற்றி கணக்கிடுவோம்.

திமுக 42.4%

கழித்தல்

கமல் -2%

சீமான் -2%

நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்

மொத்தம் – 9%

திமுக இறுதியாக 42.4 – 9 = 33.4

மொத்தம் 33.4%

2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட நிலையில் முக்கியமான 77 தொகுதிகளில் பாமக பெற்ற வாக்கு விவரங்களை பார்த்தால், 77 தொகுதிகளில் அதிமுக 29 தொகுதிகளில் தோல்வியுற்றது, இப்பொழுது இரண்டும் இணையும் பொழுது அது மிக உறுதியாக அதிமுகவுக்கு வெற்றி தருகிறது.

இந்த பகுப்பாய்வு மூலம் மக்கள் சாதாரணமாக வாக்களித்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவிற்கு மிக சாதகமான விடயம், பாமகவின் வாக்குப் பங்கு, இது கடந்த 5 தேர்தல்களிலும் நிலையானது. அதில் நடுநிலை வாக்காளர்கள் இல்லை. பாமக விசுவாசிகள் சேதமில்லாமல் முழுதாக வாக்களிப்பார்கள். இதை அறிந்தே அதிமுக= பாமக உடனான கூட்டணியை முதலில் கைசாத்திட்டது. அடுத்த விடயம் பாஜக. இக்கட்சிக்கு சமீப காலங்களில் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. இதை அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது நடுநிலையாக மதிப்பிட்டால் அதிமுகவுக்கு 44% வாக்குகள் கிடைக்கும். இதன் காரணமாக தொடர்ந்து இந்த முறையும் திமுக தோல்வியைத்தான் காணும்.

தற்போதைய லேட்டஸ்ட் கணக்கின் படி தேமுதிகவும், அமமுகவும் கூட்டணியாக இணைந்திருப்பதால், இருபக்கமும் தலா 1% வாக்கு இழப்பு ஏற்படும். அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

நான்கு முனை போட்டியில் இப்போதைய சூழலில் சிறுபான்மையினர் வாக்குகள் சமமாக விழும். இறுதி நேரத்தில் ரஜினி யார் பக்கமாவது வாய்ஸ் கொடுத்தால் அந்த பக்கம் 3 – 5 சதவிகிதம் வாக்குகள் விழும். எனவே இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அதிமுக வெற்றி காரணங்கள்

  1. அதிமுக வுக்கு எதிராக எந்த குறையோ அல்லது எதிர் அலையோ மக்களிடத்தில் இல்லை.
  2. நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் திரும்பியிருக்கின்றன.

3 பிரிவினை இல்லாத கட்டமைப்பை அதிமுக தலைவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

  1. குழப்பமில்லாமல் திட்டமிட்டு நேர்த்தியாக தேர்தலை அணுகுகிறார்கள்.
  2. எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் சிறந்ததாக, வாக்கு வாங்கி தரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.

திமுக தோல்வி காரணங்கள்

  1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்பமுடியவில்லை. நான்கு வருடங்களிலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது திமுக வின் தந்திரமின்மையையும், சக்தியின்மையையும் காட்டுகிறது.
  2. மேல் மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. துரைமுருகன், டி ஆர் பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் வேலை செய்கிறார்கள்.
  3. பிரசாந்த் கிஷோரை நம்பி தன் பாரம்பரிய தேர்தல் ஸ்டைலை திமுக கைவிட்டது. அது தலைவர்கள் = தொண்டர்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.
  4. பிரசாந்த் கிஷோர் ஏதாவது மேஜிக் செய்வார் என்று பார்த்திருக்க, தலைமுடி மாற்றுதல், வயலில் போட்டோ, நாடகத் தனமான குறைகேட்பு என ஒரு விளம்பர கம்பனி வேலைகளைத் தான் செய்தார். இறுதியில் நான் வெற்றி தோல்விக்கெல்லாம் பொறுப்பாளி இல்லை, ஆலோசகர்தான் என்று ஒதுங்கிக் கொண்டார்.
  5. மோசமான வேட்பாளர் தேர்வு. கிக்ஷோரின் வேட்பாளர் பட்டியல், மூத்த தலைவர்களின் வேட்பாளர் பட்டியல், ஸ்டாலின் அவர்களின் வேட்பாளர் பட்டியல், திருமதி துர்கா ஸ்டாலின் பட்டியல் என நான்கு பட்டியல்கள் உலா வந்தன. கவர்ச்சியில்லாத தேர்தல் அறிக்கை.
  6. விபத்து நடக்கும் முன் கடைசி நொடியில் நடப்பது நடக்கட்டும் என்று பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஓக்ஸிலேட்டரை முறுக்குவது போல திமுகவின் போக்கு இருக்கிறது. அதனால் இது மாறாத இறுதிக் கணிப்பு. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் 198 தொகுதிகளில் வெற்றிப்பெறும்.” என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரும், ‘இது திமுகவுக்கு எதிராக நடத்தப்படுகின்ற உளவியல் தாக்குதல்’ என்றும், ‘2016 தேர்தலில் திமுக- அதிமுக வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம்தான். இந்த ஒப்பீட்டு அறிக்கையில் சொல்லும் அளவுக்கு வாக்கு வித்தியாசம் இல்லை.’ என்றும், இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு ஆதரவான ஊடகவியலாளர் என்றும், அவரது பல ஒப்பீடு தேர்தலில் எதிர்மறையான முடிவை வழங்கியிருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

வேறு சிலர் ‘இது போன்ற ஒப்பீட்டு கருத்து கணிப்புகளை வெளியிடும் பார்த்தசாரதிகளும், ஸ்ரீனிவாசன்களும், வெங்கட்ராமன்களும் தான் அறிவாளிகள் என்பதை தமிழகம் என்றைக்கோ தகர்த்து விட்டது..’ என்றும், ‘இது கருத்து திணிப்பு. தரவுகளின் அடிப்படையில் முறையாக பகுப்பாய்வு செய்யப்படவில்லை.’என்றும், ‘பாரபட்சமான ஒப்பீடு’ என்றும், ‘இந்த பகுப்பாய்வில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றது எப்படி? என்பது இடம்பெறவில்லை’என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

வேறு சிலர் ,‘மக்களவைத் தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் மக்கள் எப்படி வாக்களித்தனர். அமமுக, ம.நீ.ம ஏன் நாம் தமிழர் கட்சி கூட வாக்குகளைப் பிரித்தது. இருந்தும் ஒன்பது தொகுதிகளில் வெற்றி. அதன் பிறகு நடைபெற்ற விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் வெற்றி. எனவே மக்களைத் தேர்தலை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.’ என்றும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் உற்று அவதானிக்கும் போது முதன்முதலாக கடந்த தேர்தல்களை போல் அல்லாமல் முதன் முறையாக தமிழக அரசியல் களத்தில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதைப் பார்க்கிறோம். ‘அதிமுகவைநிராகரிக்கிறோம்’என்றும் திமுகவும், ‘திமுக வேண்டாம்’ என்று அதிமுகவும் விளம்பரம் மூலம் காட்சி ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதே தருணத்தில் முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களை கவர இரண்டு முன்னணி அரசியல் கட்சிகளும் டிஜிற்றல் வடிவிலான பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கின்றன. இவை இளம் வாக்காளர்களை கவர்ந்திருப்பதால், அவர்களின் வாக்கை யார் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றிப்பெற இயலும் என்ற நிலை களத்தின் யதார்த்தநிலை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.