நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் சுனாமி அச்சம்

E3 dSBaWYAUFkMn
E3 dSBaWYAUFkMn

இந்தோனேசியா கடற்கரையில் புதன்கிழமை 6.1 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அச்சம் எழுந்துள்ளது.

மாலுகு தீவுகள் என்று அழைக்கப்படும் மொலுக்காஸ் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கடற்கரையை அண்மித்து வசிப்பவர்களை உயர்ந்த இடங்களுக்கு செல்லுமாறு இந்தோனேஷியாவின் புவி இயற்பியல் நிறுவனம் பணித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்த இந்தோனேஷிய பேரழிவு தணிப்பு முகாமை அதிகாரி ஒருவர், சில கட்டிடங்கள் மற்றும் பொது நிலையங்கள் சேதமடைந்ததாகவும் கூறினார்.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 6 மைல் ஆழத்திலும், மாலுகு மாகாணத்தின் செராம் தீவில் உள்ள அமஹாய் நகரத்திலிருந்து 43 மைல் தொலைவிலும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா 260 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம், அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி அலைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்படுகிறது,

2018 ஆம் ஆண்டில், சுலவேசி தீவில் உள்ள பாலுவில் 7.5 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 4,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து அல்லது காணாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.