அவுஸ்ரேலிய மாகாணத்தில் கடும் வறட்சி – 3 லட்சம் லீட்டர் தண்ணீர் திருட்டு

aus
aus

அவுஸ்ரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 3 லட்சம் லீட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்ரேலியாவில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி, போதிய மழையின்மை ஆகியவற்றின் காரணமாக அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கிரேட்டர் சிட்னி, புளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது; 2 வாளி தண்ணீர் கொண்டுதான் வாகனங்களை கழுவ வேண்டும்; நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்ப சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகளை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டாலர்கள் வரையும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலர்கள் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள இவான் பிளைன்ஸ் நகரில் இருக்கும் பொது தண்ணீர் தொட்டியில் இருந்து, சுமார் 3 லட்சம் லீட்டர் தண்ணீரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மர்ம நபர்கள் எப்போது? எப்படி? தண்ணீரை திருடி சென்றனர் என்பது தெரியவில்லை. இது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள பொலிஸார் தண்ணீரை திருடியவர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.