ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த குழந்தை: பெற்றோரிடம் ஒப்படைப்பு!

child
child

கேரள மாநிலம், இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் ஓடும் ஜீப்பிலிருந்து ஒன்றரை வயதுக் குழந்தை கீழே விழுந்து சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மீண்டும் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

இடுக்கி மாவட்டம், கம்பிளிகண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமை பழனி கோயிலுக்கு சென்று இரவு ஜீப்பில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஜீப்பின் பின்புறம் தாய் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பயணித்தபோது ஆழ்ந்து உறங்கிவிட்டார்.

அப்போது அவர் மடியிலிருந்த பெண் குழந்தை தவறி வெளியே விழுந்துவிட்டதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை. அவர்கள் 50 கி.மீ. கடந்து, கம்பிளிகண்டத்தை அடைந்த பிறகே குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே, வனப் பகுதியில் விழுந்த குழந்தை வீதியின் நடுப்பகுதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்ததை அந்தப் பகுதியிலிருந்த வனச் சோதனைச் சாவடியின் கண்காணிப்புக் கருவியில் பதிவாகியது.

அந்தக் குழந்தை சிறிய காயங்களுடன் வேறு வாகனங்களில் அடிபடாமலும், விலங்குகளிடம் சிக்கிக் கொள்ளாமலும் அருகே இருந்த வனத்துறையின் சோதனை சாவடி ஊழியர்களால் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையின் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, காணாமல் போன குழந்தை குறித்து பெற்றோர் வெள்ளைத்தூவல் காவல் நிலையத்தில் தகவலளித்ததன்
பேரில் குழந்தை பெற்றோரிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.