நீண்ட காலம் அண்ட வெளியில் சஞ்சரித்த சீன விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்!

E3 APUyVIAAPdvP
E3 APUyVIAAPdvP

நீண்ட காலம் அண்ட வெளியில் சஞ்சரித்த நிலையில், சீனாவை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர். பூமியில் இருந்து அண்டவெளியில் 240 மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ள விண்வெளி நிலையத்தில் 90 நாட்கள் தங்கியிருந்த நிலையில் பூமி திரும்பியுள்ளனர்.

வெற்றிகரமாக நிறைவடைந்த இந்த பயணத்தின் மூலம், சீனா அண்டவெளி பயணத்தில் முக்கிய கட்டம் ஒன்றை பூர்த்தி செய்துள்ளதனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த  ஜூன் மாதம் 17 ஆம் திகதி அண்டவெளி சென்ற இவர்கள் இன்று மொங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் வந்து இறங்கியதாக சீன குளோபல் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 3 மாத காலப்பகுதியினில், பல்வேறு பரிசோதனை தகவல்களை அவர்கள் மேற்கொண்டதுடன், அண்டவெளியில் பல மணி நேர நடைபயிற்சியிலும் ஈடுபட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீனா விஞ்ஞானிகள் அண்டவெளி ஆராய்ச்சி குறித்து ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

சர்வதேச நாடுகளினால் முன்னெடுக்கப்படும் அண்ட வெளி ஆராய்ச்சி நிலைய திட்டத்தில் சீனா உள்ளடக்கப்படவில்லை. இந்த நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் தனியாக பரிசோதனைகள் சீன விஞ்ஞானிகளினால் முன்னெடுக்கப்படுகின்றன.

சர்வதேச அண்டவெளி நிலைய திட்டம் அமெரிக்காவின் தலைமையில், ரஷ்யா, ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.