அணு இணக்கப்பாடு தொடர்பாக ஈரான் – உலக வல்லரசுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை!

1636020583 6040220 hirunews
1636020583 6040220 hirunews

ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கு இடையிலான அணு இணக்கப்பாடு பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த மாதம் 29 ஆம் திகதி வியன்னாவில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக ஈரானின் இணைப்பாளர் அலி பக்ரி கானி தமது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஈரானுக்கும், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டளவில் அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் யுரேனிய விரிவாக்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி இருந்ததுடன், இந்த விடயத்தைக் கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டு இருந்தது.

எவ்வாறாயினும் இந்த ஒப்பந்தத்தின் சில சரத்துக்களை மீறியதாகத் தெரிவித்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறினார்.

அத்துடன் ஈரான் மீதான பொருளாதாரத் தடையையும் மீள அமுலாக்கினார்.

இதன் காரணமாக ஈரான் வெளிநாடுகளில் சிக்கியுள்ள பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான தமது சொத்துக்களை கையாள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து 2018 ஆம் ஆண்டு விலகியிருந்த அமெரிக்காவும் மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி வியன்னாவில் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இருப்பதாக அதன் பேச்சாளர் நெட் ப்ரைஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஈரான் மிக தீவிரமாக இருந்தால் விரைவில் தீர்வு ஒன்றைக் காண முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.