இஸ்லாம் என்ற பெயரில் வன்முறைக்கு எதிராக மிதமாக நடந்துகொள்ளப்போவதில்லை – இம்ரான் கான்

730257 3425631 PM Imran updates
730257 3425631 PM Imran updates

இஸ்லாமின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

சியல்கொட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடிப்படைவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாலிக் அத்னனுக்கு பாராட்டு

பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகள் சுற்றிவளைத்திருந்த போது அவரை பாதுகாப்பதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து போராடியிருந்த மாலிக் அத்னன் என்பவரின் செயலை பாராட்டி சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், 2014 ஆம் ஆண்டு பெசாவரில் பாடசாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முழு நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று பட்டதைப் போல, சியல்கொட் சம்பவத்தை அடுத்து முழு பாகிஸ்தானும் இனி இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறக்கூடாது என்பதில் ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த கொடூரம் இடம்பெற்ற போது தமது உயிரைப் பற்றி கவலைபடாமல், மாலிக் அத்னன் பிரியந்த குமாரவை பாதுகாக்க முயற்சித்தமை சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக அவருக்கு “தம்ஹா ஐ சுஜாத்“ என்ற அதி உயர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாக் உலமா அமைப்பு கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன கொலை செய்யப்பட்டமைக்கு அந்த நாட்டின் இஸ்லாமிய மத தலைவர்கள் அடங்கிய உலமா அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது இஸ்லாத்திற்கு எதிரானது எனவும், சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியும் கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, இந்தியாவில் வாழும் 22 கோடி முஸ்லிம்கள் சார்பில் தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய யூனியன் தேசிய முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகைதந்துள்ளது.

இந்தக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுடன் இன்று கொழும்பில் சந்திப்பை நடத்தியது.

இதன்போது, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இந்திய யூனியன் தேசிய முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.