கானாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் பலி

61350595
61350595

கிழக்கு ஆபிரிக்க நாடான கானாவில் சுரங்க பணிகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியுடன் உந்துருளி மோதியால் ஏற்பட்ட வெடி விபத்தில் 17  பேர் உயிரிழந்துள்ளனர்.

கானாவின் மேற்குப்பகுதியில் உள்ள தங்கச்சுரங்கமொன்றுக்கு தேவையான வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்று பொகாசா நகரில் உள்ள சந்தைப்பகுதியொன்றின் ஊடாக பயணித்துக்கொண்டிருந்தபோது, வேகமாக வந்த  உந்துருளியொன்று அதனை மோதியுள்ளது.

இந்த விபத்தில் பாரஊர்தி தீப்பற்றியதையடுத்து அதிலிருந்த வெடிமருந்துகள் வெடித்துள்ளன.

இவ்வெடி விபத்தையடுத்து, அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகியதுடன் 17 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.