தாய்லாந்தில் 17 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாலா, நாரதிவட் மற்றும் பட்டானி ஆகிய மாகாணங்களில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.
சம்பவத்தில் குறைந்தது 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த பிராந்தியங்களின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 17 இடங்கள் தாக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
பட்டாணி பிரதேசத்தில் இரண்டு தாக்குதல்களும், யாலாவில் ஆறு தாக்குதல்களும், நாரதிவட்டில் ஒன்பது தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.
பட்டானியின் – நோங் சிக்கில் உள்ள எரிபொருள் நிலையமொன்று தீயினால் முற்றாக நாசமாக்கப்பட்டது.
4 ஆவது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரியாங்க்ராய் ஸ்ரீராக், சம்பவ இடத்தில் பணிபுரியும் வெடிகுண்டுகளை அகற்றும் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் தாக்குதல்கள் வெளிப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டவை என்றும், குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், தொலைதொடர்பு கோபுரங்கள் போன்ற இடங்களில் இந்த வெடிப்பு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மலேசியாவுடனான எல்லையில் உள்ள தெற்கு தாய்லாந்தில் உள்ள மாகாணங்கள் பல தசாப்தங்களாக கிளர்ச்சிகள் தொடர்கின்றன.
இதில் தாய்லாந்து அரசாங்கம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பட்டானி, யாலா, நாரதிவாட் மற்றும் சோங்க்லாவின் சில பகுதிகளுக்கு சுதந்திரம் கோரும் நிழல் உலகக் குழுக்களுடன் போரிட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு முதல் மோதலில் 7,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று வன்முறையைக் கண்காணிக்கும் டீப் சவுத் வோட்ச் குழு தெரிவித்துள்ளது.
2013 இல் தொடங்கிய சமாதானப் பேச்சுக்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை எதிர்கொண்டன.
கொவிட் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தாய்லாந்து அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிளர்ச்சிக் குழுவான பாரிசான் ரெவலூசி நெஷனலுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின்னர், இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்திய சுற்றுப் பேச்சுக்களில் இருந்து ஓரங்கட்டப்பட்ட Patani United Liberation Organisation (PULO), முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின் போது குண்டுவெடிப்புகளை நடத்தியது.
அனைத்து குழுக்களுடனும் பேச தயாராக இருப்பதாக தாய்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது