அதிவிரைவு ரயில் சேவை – அரசு அனுமதி

3gggg
3gggg

அதிவிரைவு ரெயில் திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது என்று கூறப்படுகிறது.

லண்டன் – பேர்மிங்கம், அதனைத் தொடர்ந்து மன்செஸ்ரர் மற்றும் லீட்ஸ் ஆகியவற்றை இணைக்கும் ரெயில் பாதை குறித்த அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை பிரதமரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தினை ஆதரிப்பவர்கள், போக்குவரத்து நேரங்களை மேம்படுத்தமுடியும் என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கமுடியும் என்றும் கூறுகிறார்கள்.

எனினும் திட்டத்தின் அதிகரித்த செலவு மற்றும் தவறான நிர்வாகம் முதலான குற்றச்சாட்டுக்கள் திட்டத்தினை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

HS2 ரெயில் திட்டம் 2040 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. திட்டத்திற்கான செலவு இரட்டிப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் முழுமையான திட்டத்தை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், செலவைக் குறைக்க திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மன்செஸ்ரர் மற்றும் லீட்ஸ் செல்லும் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

HS2 ரெயில் திட்டதிற்கு 56 பில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும் என ஆரம்பத்தில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அண்மைய மதிப்பீட்டின்படி 106 பில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆடம் மார்ஷல் (Adam Marshall) பிபிசியிடம் தெரிவிக்கையில்; அதிவிரைவு ரெயில் திட்டத்தின் மூலம் பயணிகளின் நெரிசலைக் குறைக்க முடியும் என்று கூறினார்.

மேலும் எமது நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு ஒரு சிறந்த பின்புலம் தேவை. HS2 ரெயில் திட்டம் வழங்கப் போகும் திறன் மிகவும் முக்கியமானது.

உண்மையில் இதனை முன்னெடுப்பதால் மக்கள் அதனைப் பின்பற்றி தமது திட்டங்களைத் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.