கொரோனவால் உலகப் பொருளாதாரத்தில் இழப்பு

1 economy 2
1 economy 2

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 80,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவியிருக்கும் நிலையில், தற்போது வரையில் 101,917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 3,488 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் இறப்புகளின் எண்ணிக்கை 1.5 கோடியாக உயரும் என்று ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், உலகப் பொருளாதாரத்தில் 2.3 இலட்சம் கோடி டொலர் வரையில் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி 1.5 சதவீதம் வரையில் இருக்கும் எனவும், அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி 2 சதவீதமாக இருக்கும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

சர்வதேச அளவில் உயிரிழப்புகளையும், பொருளாதார வீழ்ச்சியையும் தடுக்க துரிதமான கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று இந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 0.1 சதவீதம் முதல் 0.2 சதவீதம் வரையில் வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவித்திருந்தது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டாலினா ஜியார்ஜீவா கூறினார்.சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த கொரோனா பாதிப்பால் 3.8 சதவீதமாகக் குறையும் எனவும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டிருந்தது.