அருங்காட்சியக திருட்டு – நான்கு பாதுகா வலர்களுக்கு தொடர்பு!

0 VBV
0 VBV

ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய புராதன நகைகள் ஜேர்மன் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து திருடப்பட்ட வழக்கில், அருங்காட்சியக பாதுகாவலர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட்டேன் இல் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் திருடப்பட்ட விடயம் மொத்த ஜேர்மனியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாரும் நெருங்கக்கூட முடியாது என்று கருதப்பட்ட பாதுகாப்பு கொண்ட அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துள்ளது என்றால், நிச்சயம் அருங்காட்சியகத்துடன் தொடர்புடைய யாரோ இந்த திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம், ஆரம்பம் முதலே பொலிசாருக்கு இருந்து வந்தது.

அதற்கேற்றாற்போல், சம்பவம் நடந்த நவம்பர் 25 அன்று பணியிலிருந்த இரண்டு பாதுகாவலர்கள் திருடர்களைப் பிடிக்காததால் அவர்கள் திருடர்களுக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன் திருடர்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அந்த பாதுகாவலர்கள் எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்காமல், பொலிசாரை அழைத்துள்ளதால், திருடியவர்கள் தப்பிச்செல்ல அவர்கள் போதுமான நேரம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நவம்பர் 29 அன்று கைது செய்யப்பட்ட மூன்றாவது பாதுகாவலர் ஒருவர், அருங்காட்சியகத்தின் வரைபடத்தையும் பாதுகாப்பு குறித்த விவரங்களையும் திருடர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நான்காவது பாதுகாவலர் ஒருவர், திருடர்கள் நகைகள் இருந்த பெட்டகங்களை உடைக்க வசதியாக, எச்சரிக்கை அலாரத்தை பழுதாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த திருட்டு சம்பவத்தில் ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நான்கு பாதுகாவலர்களையும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.