கதறிய மக்கள் கண்டுகொள்ளாத நாடுகள் ;கரம் கொடுத்த கியூபா

download 4 2
download 4 2

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகின் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத பயணிகள் கப்பல் ஒன்றை கியூபா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த கப்பலில் இருக்கும் பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

ஜப்பானில் இப்போதும் பயணிகள் கப்பல் ஒன்று 1500 பயணிகளுடன் கடலில் மிதக்கிறது.

அதேபோல் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று கடந்த ஒரு வாரமாக கரிபியன் கடலில் தத்தளித்தது.

இந்த பயணிகள் கப்பலின் பெயர் பிரேமர் ஆகும். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் இருந்து இந்த கப்பல் புறப்பட்டுள்ளது.

பிரிட்டன் நோக்கி இந்த பயணிகள் கப்பல் சென்றுள்ளது. இதில் 1252 பயணிகள் இருந்துள்ளனர். அதேபோல் 150 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

இந்த கப்பலில் இருந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அதன்பின் வரிசையாக 22 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.

அதேபோல் இன்னொரு பக்கம் பணியாளர்கள் 22 பேருக்கு கொரோனா தாக்கியது. தற்போது அங்கு 45 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் அருகில் இருக்கும் கரிபியன் தீவு ஒன்றில் அந்த கப்பலை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் கரிபியன் நாடு இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்த கப்பல் அப்போது அமெரிக்கா அருகில் இருந்தது. ஆனால் கடல் எல்லையில் இருக்கும் அமெரிக்காவின் எந்த மாகாணமும் இந்த கப்பலை ஏற்கவில்லை. அதேபோல் இந்த கப்பல் எங்கிருந்து கிளம்பியதோ, அந்த அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோ தீவும் கூட இந்த கப்பலை ஏற்கவில்லை. இன்னொரு பக்கம் டொமினிக்கான் ரிப்பப்ளிக், பனாமா என்று யாரும் இந்த கப்பலை கொரோனா அச்சம் காரணமாக ஏற்கவில்லை.

இப்படி பல நாட்டின் எல்லைக்கு சுற்றியதால் இந்த கப்பலில் எரிபொருள் வெகுவாக குறைந்தது. இதனால் பிரிட்டன் செல்லும் அளவிற்கு எரிபொருளும் இதில் இல்லை.

அதேபோல் கப்பலில் இருந்த நோயாளிகள் இதனால் மிக மோசமாக பாதித்தனர். போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் இவர்கள் எல்லோரும் மோசமான உடல்நிலைக்கு சென்றனர். சிலர் உயிருக்கு போராடும் நிலை உருவானது. இதனால் அந்த கப்பலில் இருந்த மக்கள், உலகில் யாராவது தங்களுக்கு உதவ மாட்டார்களா என்று பதற தொடங்கிவிட்டனர்.

வரிசையாக பல நாடுகள் இவர்களை புறக்கணித்ததும், இவர்களுக்கு உயிர் மீது அச்சம் வர தொடங்கிவிட்டது. நோய் இல்லாதவர்களுக்கும் கொரோனா பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது.

அப்போதுதான் சரியாக கியூபா இவர்களுக்கு கைகொடுத்துள்ளது. ஆம் கியூபா அரசு இந்த கப்பலில் இருக்கும் மக்களை தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி அளித்துள்ளது. நேற்று இவர்கள் எல்லோரும் கியூபாவிற்கு சென்றார்கள்.

கியூபாவில் இவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து இவர்களுக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமானம் மூலம் இவர்கள் பிரிட்டன் சென்று உள்ளனர். கியூபாவிற்கு இதனால் பிரிட்டன் பெரிய அளவில் நன்றி தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகள் இந்த மக்களை புறக்கணித்த போது கம்யூனிச புரட்சிக்கு வித்திட்ட லத்தீன் அமெரிக்க நாடான கியூபா இந்த மக்களை காப்பாற்றி உள்ளது.