கொரோனா வைரஸ் – காற்றில் நீந்தும் வீராங்கனை

72
72

ரஷ்யாவை சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை யூலியா எஃபிமோவா நீச்சல் குளமின்றி அந்தரத்தில் நீச்சல் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரஷ்யாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே செல்வதில்லை. நமது ஊரில் கொடுக்கப்படும் அவசர பாஸ் போன்ற வசதிகள், சலுகைகள் எல்லாம் ரஷ்யாவில் கிடையாது. வீட்டை விட்டு யாரும் வரக்கூடாது என்றால் வரக்கூடாது. அதனை மீறி சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை யூலியா எஃபிமோவா வழக்கமாக தாம் நீச்சல் பயிற்சி பெறும் நீச்சல் குளத்திற்கு செல்ல முடியாததால் வீட்டிலிருந்தபடியே, அதுவும் நீச்சல் குளம் கூட இல்லாத நிலையிலும் தனது நீச்சல் பயிற்சியை தொடர்ந்து வருகிறார். மேஜையில் தனது கால்களை இறுக்கமாக ஒருவர் பிடித்துக்கொள்ள, தனது உடலை அவர் அந்தரத்தில் வைத்து தோள்பட்டைகளை மூலம் நீந்தி பயிற்சி செய்கிறார்.


முழு உடலையும் சமநிலைப்படுத்தி, தன்னை மிகவும் வருத்தி இந்த நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் யூலியா எஃபிமோவா. நீரில் எப்படி நீந்துவாரோ அதேபோல் தனது தோள்பட்டைகளை உயர்த்தி மிக கடினமான முறையில் இந்த பயிற்சியை அவர் வீட்டில் இருந்தபடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.