முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு தடை விதித்த அமேசான்!

i3 18 2
i3 18 2

அமெரிக்காவில் குற்றவாளிகளை கண்டறிய பொலிசாருக்கு உதவும் தனக்கு சொந்தமான முக அங்கீகார தொழில்நுட்பத்தை தற்காலிகமாக ஓராண்டுக்கு பயன்படுத்த அமேசான் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் முக அங்கீகார தொழில்நுட்பம் குறித்து விவாதம் நீண்டுக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் மினியாபொலிசில், பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது முழங்காலால் கழுத்தில் நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

ஜார்ஜ் பிளாய்டின் மரணம், பொலிஸ் பயன்படுத்தும் முக அங்கீகார தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்து விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் பிளாய்டு மரணத்தை தொடர்ந்து இனரீதியான விவரக்குறிப்பு மற்றும் வெகுஜன கண்காணிப்புக்கு முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஐ.பி.எம் தடை விதித்த நிலையில், அமேசான் நிறுவனமும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

முக அங்கீகார தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை நெறிமுறைப்படுத்த அரசு வலிமையான விதிமுறைகளை வைக்க வேண்டுமென கோருகிறோம். சமீப காலமாக காங்கிரஸ் இந்த சவாலை ஏற்க தயாராக உள்ளதாக தெரிகிறது. இந்த ஓராண்டு தடை காலம் பொருத்தமான விதிகளை அமல்படுத்த அமெரிக்க பார்லி.,யான காங்கிரசுக்கு போதுமான அவகாசமாக இருக்குமென நம்புகிறோம். கோரிக்கை விடுத்தால் உதவுவதற்கு தயாராக உள்ளோம் என அமேசான் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்புகள் போலன்றி, அமேசானின் Recognition செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள போலீசாரின் தரவுகளில் உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டு முடிவுகளை தெரிவிக்கும். கடந்த காலங்களில், அமேசான் தனது முக அங்கீகார தொழில்நுட்பம் சார்பு இன்றி செயல்படுவதாக வாதாடியது. அதே நேரத்தில் சட்டரீதியான அமைப்புகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிப்பதாக கூறியிருந்தது. அமேசான் தனது முக அங்கீகார தொழில்நுட்பத்தை காணாமல் போன குழந்தைகளை கண்டறியவும், கடத்தலை தடுக்க மனித உரிமை அமைப்புகளுக்கு தொடர்ந்து அளிப்பதை உறுதி செய்துள்ளது.

மற்ற முக அங்கீகார தொழில்நுட்பத்தை போன்று அமேசானின் முக அங்கீகார தொழில்நுட்பத்தில் கறுப்பு நிறத்தவரை அடையாளம் காண்பதில் பிரச்னை உள்ளது. 2019ல் நடத்தப்பட்ட ஆய்வில், கறுப்பினத்தவரின் பாலினத்தை அடையாளம் காண்பதிலும், கறுப்பின பெண்ணை ஆணாகவும் மாற்றி காட்டுவதாக கண்டறியப்பட்டது. அதேநேரத்தில் வெள்ளை நிறத்தவரை கண்டறிவதில் எவ்வித குளறுபடிகளும் இல்லை.