கொரோனா பரிசோதனை; இந்தியாவில் மிகவும் குறைவு!

1 vgh 1
1 vgh 1

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இந்த நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இது குறித்து தெரிவித்திருந்த உலக சுகாதார அமைப்பு, அனைத்து நாடுகளும் அதிகப்படியான கொரோன பரிசோதனைகள் செய்ய வேண்டும் எனவும் பரிசோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் மட்டுமே பாதிப்பை கண்காணிக்கவும், குறைக்கவும் முடியும் என அறிவுறுத்தியிருந்தது.

இந்த ஆலோசனைகளை பின்பற்ற தொடங்கியுள்ள பல நாடுகள், பரிசோதனை மூலம் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளை அடையாளம் காணுதல், பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் நாடுகளை குறித்து ஸ்டேடிஸ்டா என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதில் ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் எத்தனைப் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்துள்ளது.

அதன்படி உலகில் கொரோனா பரிசோதனைகள் அதிகம் நடத்தப்படும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது. இங்கு 10 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 2,61,236 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிகப்படியாக கத்தாரில் 97,678 பேருக்கும், ஸ்பெயினில் 95,507 பேருக்கும், ரஷ்யாவில் 95,080 பேருக்கும், போர்ச்சுக்கள், 93,553 பேருக்கும், பிரிட்டனில் 91,956 பேருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் 10 லட்சம் பேரில் 25,000க்கும் குறைவான கொரோனா பரிசோதனை நடத்தப்படும் நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் இதுவரை 3,889 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் 3,667 பேருக்கும், மெக்சிகோவில் 2,886 பேருக்கும், வங்கதேசத்தில், 2,778 பேருக்கும், மிகவும் குறைவாக எகிப்தில் 1321 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.