தான் இருந்த சிறையிலிருந்தபோது குளியலறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்தது –மரியம் நவாஸ் குற்றச்சாட்டு!

1604889200
1604889200

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டுக்காரணமாக சிறையிலிருந்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ், தான் தங்கியிருக்கும் சிறைச்சாலை மற்றும் தனது குளியலறையில் கெமரா பொருத்தப்பட்டதாக தெரிவித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அவரது மகள் மரியம் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகளும் அவரது மருமகன் சப்தர்க்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் உடல்நலக்குறைவு காரணமாக நவாஷ் ஷெரிப் கடந்த ஆண்டு பிணை பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

இதேபோல், அவன்பீல்ட் ஊழல் வழக்கு மற்றும் சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் ஜாமின் பெற்றுள்ள மரியம் ஷெரிப் தற்போது கட்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது சிறை அனுபவங்கள் குறித்து பேசிய மரியம் ஷெரிப், ”நான் இரண்டு முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன், நான் ஒரு பெண்ணாக சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றிப் பேசினால், அவர்கள் முகங்களைக் காண்பிக்கும் தைரியம் இருக்காது. குறிப்பாக நான் சிறையிலிருந்தபோது எனது அறையிலும் குளியலறையிலும் கெமரா பொருத்தப்பட்டிருந்தது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.