ராஜபக்ஷக்களின் தடத்தில் தமிழ் மக்களைப் பயணிக்க வழிநடத்துகிறாரா சுமந்திரன்?

sumanthiran mahinda
sumanthiran mahinda

தமிழர்களின் பிரச்சினை அரசியல் ரீதியான உரிமைகளுக்கானது இல்லை. வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளே என்ற கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை மெய்ப்பிக்கும் – உண்மையாக்கும் விதத்தில் உரையாற்றியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் – அரசியல் சாணக்கியருமான சுமந்திரன்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி – செம்பியன்பற்றில் அவர் நடத்திய தேர்தல் பரப்புரையிலேயே இத்தகைய ஒரு பெரும் வெடிகுண்டை தமிழ் மக்கள் மீது தூக்கிப் போட்டுள்ளார். அடிப்படையில் தமிழர்களுக்கு விரோதமான கோட்டாபய ராஜபக்ஷ – மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்கு பலம் தர வேண்டும் என்பதே அந்த வெடிகுண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிடித்த ஏழரைச் சனி என்று சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களாலும்கூட விமர்சிக்கப்படுபவர் முன்னாளில் மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரன் என்றும் தேர்தலில் 1 ஆம் இலக்கத்தைப் பெறுவதற்காக இந்நாளில் ஆபிரஹாம் சுமந்திரன் மதியாபரணம் என்றும் அழைக்கப்படும் சுமந்திரன்.

தமிழ் மக்கள் மீது சுமந்திரன் வீசிய இந்தக் குண்டு – தமிழ் மக்களின் 70 வருட கால உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினைகளே இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகளே உண்டு என்ற கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை ஆமோதித்து – வழிமொழிந்து – உச்சி முகவர்வதாக உள்ளது சுமந்திரனின் சர்ச்சைக் கருத்து.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகவர் என்று சாடப்படும் சுமந்திரன், இன்று பலவீனமடைந்து – உடைவுற்று – ஈனஸ்வரம் எழுப்பும் அந்தக் கட்சியைக் காப்பாற்றும் நோக்கில்  – ராஜபக்ஷக்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முனையும் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பத்துக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக – ஐ.தே.கவுக்கு பக்கபலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளது என்ற செய்தியை பூடகமாக உணர்த்துவதாகவும் இந்தச் செய்தி சொல்லப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜே.வி.பி. கிளர்ச்சியே போராட்டம் – தமிழ் மக்களின் – விடுதலைப் புலிகளின் போராட்டம் வெறும் வன்முறையே என்று நிரூபிக்க சுமந்திரன் ஆணை கேட்பதாகவும் இது அமைகின்றது.

இலங்கையில் நடந்தது மனித உரிமைகள் மீறல், போர் குற்றம் இல்லை என்று கூறியிருந்தார் சுமந்திரன். இதனையே குற்றச்சாட்டுக்குள்ளான ராஜபக்ஷக்களும் சொல்கின்றனர். இப்போது ராஜபக்ஷக்களின் பாணியிலேயே தமிழர்களுக்கு அபிவிருத்தி போதும் என்ற ரீதியில் கருத்துரைத்திருக்கும் சுமந்திரன் இனியும் என்ன சொல்லப் போகிறார்? செய்யப் போகிறார்.

மற்றோர் ஜீ.ஜீ. பொன்னம்பலம்!

தமிழ் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்தவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம். ஆனால், அவர் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தபோது அத்தனை செல்வாக்கையும் – மதிப்பையும் இழந்தார்.

அவரின் நிலையை உணர்ந்தும் – அறிந்தும் – தானும் அத்தகு கடினபரீட்சையை எடுக்கத் தயார்! என்ற ரீதியிலும் சுமந்திரன் கருத்துரைத்துள்ளார். அவர் தனது உரையில், “1952 இல் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கட்சி முதன்மை கட்சியாக வென்றது. அதன் பின்னர் நடந்த எல்லாத் தேர்தலிலும் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே வென்றது. சமஷ்டி என்ற ஆட்சிக்கு குறைவான முறைக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை” என்றும். வரலாற்றை நன்கு தெரிந்தே தான் இப்போது அபிவிருத்தி குறித்துப் பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

அதாவது, இப்போது தமிழ் மக்கள் சமஷ்டியை – அதிகாரப் பகிர்வை – உரிமைகளை – தமது பிரச்சினைக்கான தீர்வைக் கோரவில்லை. அபிவிருத்தியையே கோருகின்றனர் – விரும்புகின்றனர் என்பதே இப்போது சுமந்திரனின் கருத்தியலாக இருக்கிறது.

அதனால்தான் தன்னை இன்னொரு டக்ளஸாக யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காக ஜீ.ஜீ. பொன்னம்பலமாக பார்க்குமாறு தானே தனக்கான வடிவத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் ஜீ.ஜீ. பொன்னம்பலம்.

ஆனால், இதற்கு முன்பாக சுமந்திரன் இன்னொரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நேரடியாக உள்வாங்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாகவே அக்கட்சியினர் தேர்தல் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிகளே நேரடியாக கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர்.

2004 தேர்தலுக்கு முன்பாக ஆனந்தசங்கரி சின்னம் தொடர்பான பிரச்சினையைக் கிளப்பி நீதிமன்ற நாடி தனது உரிமையை நிலைநிறுத்திய பின்னர், கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பின்னணியில் இருந்த புலிகள் – தலைவர் பிரபாகரன் நினைத்திருந்தால் இலகுவாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்களில் கூட்டமைப்பை போட்டியிட வைத்திருக்க முடியும். அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ – அவரின் தாயாரோ மறுப்போ – எதிர்ப்போ தெரிவித்திருக்க மாட்டார்கள். மனமுவந்து வழங்கியிருப்பார்கள்.

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. தந்தை செல்வாவின் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் மீட்டு எடுத்து மாவை. சேனாதிராசாவிடம் ஒப்படைத்து கூட்டமைப்பைத் தேர்தலில் போட்டியிட வைத்தனர். இதற்குக் காரணம், சைக்கிள் சின்னம் தொடர்பில் தமிழ் மக்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள விடயமே வேறு. அதாவது அக்காலத்தில், அமைச்சுக்களைப் பொறுப்பேற்று – ஒற்றையாட்சியை ஏற்று – சிங்கள பேரினவாத அரசுகளுடன் இணைந்து இயங்கிய கட்சியை தமிழ் மக்கள் ஆதரிக்கத் தயங்குவர் என்பதே அது.

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கட்சியும் – அவரின் பேரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரின்  கொள்கைகளை தீண்டத்தகாதவைகளாகப் பார்க்கும் நிலையில் சுமந்திரன் தன்னை இன்னொரு ஜீ.ஜீ. பொன்னம்பலமாக காண்பிக்க முயற்சிக்கிறார். முன்னரே தமிழ்த் தலைவர்கள் அரசுடன் இணைந்து இயங்கினர் என்ற வரலாற்றை மீள உரைக்கவும் டக்ளஸ் தேவானந்தாவாக சித்திரித்து ஒதுக்கி விடக்கூடாது என்பதற்காகவுமே.

அபிவிருத்தியா? உரிமையா?

ஆனால், ராஜபக்ஷக்களின் வழியில் சுமந்திரன் கூறுவது போல தமிழ் மக்கள் தமக்கு உரிமைகள் தேவையில்லை, அபிவிருத்திதான் தேவை என்று கருதினால் – தமிழ் மக்கள் தீர்மானித்தால் – கடந்த தேர்தல்களிலேயே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்து ஒதுக்கிவிட்டு – தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும் அல்லது சுதந்திரக் கட்சியையும் எப்போதோ ஆதரித்திருப்பர். அல்லது தமிழருக்கே தங்கள் வாக்கு என்றால், மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து நிற்கும் டக்ளஸ் தேவானந்தாவையம் – அவரின் ஈ.பி.டி.பி. கட்சியையும் அவர்கள் எப்போதோ ஆதரித்திருப்பர். ஆனால், தமிழ் மக்கள் அப்படியொரு முடிவுக்கு – அமிலப் பரிசோதனைக்கு தயார் இல்லை.

இதனாலேயே உரிமைக் கோஷத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு – தமிழ்த் தேசியத்துக்கு தொடர்ந்து தமது பேராதரவை வழங்கினார்கள். தமிழ் மக்கள் வெறுமனே அபிவிருத்தி மட்டுமே போதும் என்று நினைத்தால் டக்ளஸ் தேவானந்தாவுக்கோ அல்லது தென்னிலங்கையில் ஆட்சியமைக்கும் வல்லமை கொண்ட கட்சிக்கோ இலகுவாகவும் சமயோசிதமாகவும் வாக்களித்திருப்பர்.

அதேநேரத்தில், இதோ வருகிறது தீர்வு என்பதாக சுமந்திரனின் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2016 இறுதிக்குள் தீர்வு, 2017 இல் தீர்வு, தீபாவளிக்குத் தீர்வு என்று தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டியதன் அவசியம்தான் என்ன? உரிமைகள் வேண்டாம் அபிவிருத்திதான் வேண்டும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் – சுமந்திரனும் இவ்வளவு காலமும் தமிழ்த் தேசியம் – தீர்வு – அரசமைப்புத் திருத்தம் என்றும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றியது ஏன் என்ற கேள்விக்கும் பதில் கூற வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் சுமந்தினுக்கு உண்டு. அதையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

மேய்ப்பனின் வழிநடத்தலிலேயே மந்தைகள் எப்போதும் பயணிக்கின்றன. விசுவாசம் இல்லாத மேய்ப்பன் கிடைத்தால் அந்த மந்தைகளின் எதிர்காலம் அவ்வளவுதான், தறிகெட்டு – எதிரிகளிடம் – பிறரிடம் அகப்பட்டு வேட்டையாடப்பட்டு விடும். ஆனால், தங்கள் மேய்ப்பனைத் தேர்ந்தெடுக்க மந்தைகளுக்கு இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது. சரியான – நேர்மையான – உண்மையான – விசுவாசமான மேய்ப்பனை தேர்ந்தெடுக்காது – தவறான – விசுவாசமற்ற – பிற மந்தைகளின் பாதுகாப்புக்கு விலைபோய் தனது மந்தைகளைப் பலிகொடுக்கக் துணிந்த மேய்ப்பனை மந்தைகள் தேர்ந்தெடுப்பின் அவற்றுக்கு அழிவு மட்டுமே மிஞ்சும்.

சுமந்திரன் விடயத்தில் தமிழ் மக்களுக்கும் இது பொருந்தும்.

கரிகால்வளவன்