வடக்கு ஆளுநராக சந்திரகுமார்? கோத்தாவுக்கு சிபாரிசு செய்தார் மருத்துவ பிரபலம்!

fea02
fea02

தேர்தலுக்கு முன்பாகவே வடக்கு ஆளுநர் பதவி யாருக்கு என்பது தொடர்பில் கடும் போட்டி நிலவியது. அந்தப் பதவியைப் பெற பிரதமர் மகிந்தவை சிலர் அணுகினர். அவரும் யாழ்ப்பாணத்தின் ஊடக பிரபலம் ஒருவரை தனது தம்பியும் ஜனாதிபதியுமான கோத்தாபயவுக்கு சிபாரிசு செய்தார்.

ஆனால், கோத்தாபயவோ நைசாக அவரை தவிர்த்து விட்டார். வடக்கு மாகாணம் எப்போதும் தனது கண், கை அசைவிலேயே இருக்க வேண்டும் என்பது ஜனாதிபதி கோத்தாபயவின் விருப்பம். இதற்காகத்தான் அவர் தனக்கு நெருக்கமான அதிகாரியான திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமித்தார்.

ஆனால், அவர் விரும்பியது போல சிவில் அதிகாரியான திருமதி சார்ள்ஸால் செயற்பட முடியவில்லை. இதனால் அவரை மாற்ற முடிவு செய்தார். இதனிடையே சொந்தப் பிரச்சினைகளால் திருமதி சார்ள்ஸ் தாமே அந்தப் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.

இதனிடையே முன்னாள் யாழ். மாவட்ட தளபதியான மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை அந்தப் பதவியில் அமர்த்த சிபாரிசு செய்யப்பட்டது. எனினும் கொரோனா, தேர்தல் குறுக்கீடுகளால் வடக்கு ஆளுநர் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது தேர்தல் முடிவடைந்த பின்னர் சிவிலியன் ஒருவரையே அப்பதவிக்கு நியமிக்க ஆட்சித் தரப்பு விரும்புகிறது. இதற்குக் காரணம் முழுமையாக நாடு – முக்கியமாக வடக்கு இராணுவ அதிகாரத்துக்குள் கொண்டு வரப்படுகிறது என்ற தோற்றத்தை சர்வதேசத்துக்கு மறைக்கவே இந்த தந்திரத்தை ராஜபக்சக்கள் கையாள முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், தேர்தலில் ஆட்சித் தரப்புக்கு பேருதவி புரிந்தவர்கள் சிலரை சிபாரிசு செய்து அவர்களை வடக்கு ஆளுநர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. இப்படிக் கேட்டவர்களில் முதன்மையானவர் ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா உள்ளார்.

அவர், தனது கட்சியின் சார்பில் தவராசாவுக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று பிரதமரைக் கேட்டிருந்தார். ஆனால், அவருக்குப் போட்டியாக அப்பதவியைப் பெற ஈ.பி.டி.பியில் இருந்து விலகி தனித்து தேர்தலை எதிர்கொண்டு வரும் அசோக் என்று அறியப்பட்ட முருகேசு சந்திரகுமார் காய் நகர்த்தியுள்ளார்.

சந்திரகுமாருக்கு ஜனாதிபதி கோத்தாபயவிடம் மதிப்பு உண்டு. எனினும் அது மட்டும் தமக்கு அந்தப் பதவியைப் பெற்றுத் தராது என்பதால், தமக்கு சிபாரிசாக ஒரு மருத்துவரை நாடினார்.

யாழ்ப்பாணத்தின் பெரிய மருத்துவனைக்கு பொறுப்பாக இருக்கும் அந்த மருத்துவர் இம்முறை தேர்தலிலும் சந்திரகுமாருக்கு தனது மறைமுக ஆதரவை வழங்கியிருந்தார். இறுதிப் போர் சமயத்தில் வன்னியில் பணியாற்றிய அவருக்கு ஜனாதிபதி கோத்தாபயவிடம் பெரும் செல்வாக்கு உள்ளது.

அவரும் தனது நண்பரான சந்திரகுமாரை ஆளுநர் பதவிக்கு சிபாரிசு செய்துள்ளாராம். இவர் ஆளுநராவது விருப்பம் இல்லாத போதிலும் டக்ளஸ் தேவானந்தா அதை எதிர்க்க தயாரில்லை.

ராஜபக்சக்களை எதிர்ப்பது சாத்தியமல்ல என்ற காரணம் மட்டுமின்றி, வரும் மாகாண சபைத் தேர்தலில் சந்திரகுமாருக்கு சொந்தமான வாக்குகளை தமக்கு சாதகமாக இலகுவாக திசை திருப்பி விடலாம் என்ற நம்பிக்கையும்தான் என்கிறார்கள்.

இன்றைய நிலையில் வடக்கு ஆளுநராக சிவிலியன் தேவை என்று ஆட்சிப் பீடம் கருதுவதால் சந்திரகுமார் நியமிக்கப்படலாம் என்கின்றன உயரமட்ட தகவல்கள். எனினும் நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.