தவராசாவை ‘காய்’ வெட்டிய கட்சி செயலர்! தமிழரசுவின் அரசியல் குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

e9563c5d b89f 43a4 b544 db40c8805392
e9563c5d b89f 43a4 b544 db40c8805392

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் இன்றைய கூட்டம் படுசூடாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் கூட்டம் எதிர்பார்த்தது போன்றில்லாமல் சப்பென்று போனதற்கு முக்கிய காரணம் சுமந்திரனின் தகிடுதத்த ஆட்டம்தான் காரணம்.

இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே மாவை சேனாதிராசாவை அவர் தம்மை சந்திக்க வைத்ததும், அவர் மீதான கோபத்தை மாவையர் கொட்டித் தீர்த்ததும்தான் காரணம்.

ஆனாலும், சந்திப்புக்கு முன்னர் சுமந்திரன் இன்னொரு தகிடுதத்தையும் கையாண்டிருந்தார். அது 11 பேர் கொண்ட அரசியல் குழுவில் மாவையின் தரப்பு பலமாக விடாமல் பார்த்துக் கொள்ள முயன்றார். அதனால், கொழும்பு கிளைத் தலைவர் தவராசாவுக்கு கட்சி தலைவர் மூலம் அழைப்பை விடுக்காமல் தவிர்த்திருந்தார். அவரை லாவகமாக தவிர்த்திருந்தார்.

ஆனால், காய் நகர்த்தலை உணர்ந்த மாவை சேனாதிராசா தவராசாவை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒன்றிணைந்த போது இந்த விடயமே முதல் பேசு பொருள் ஆனது.

வழக்கம்போல பழியைத் தன் மீது ஏற்றுக் கொண்ட துரைராஜசிங்கம் தான் மறந்து விட்டேன் என்று பதிலளித்துள்ளார். 10 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவரை மறந்து விட்டீர்களா…? என்ற தொனியில் காரசாரமாக விவாதம் எழவே பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் அமைதி காத்தார். அவரின் அமைதியுடன் கூட்டத்தை திசை திருப்பினார் சுமந்திரன்.

தேசியப் பட்டியல் எம்.பியாக கலையரசன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பெரிதாக விவாதம் இடம்பெறவில்லை. அனைவரும் கலையரசனின் நியமனத்தை ஏற்றுக் கொண்டனர். எனினும் கலையரசன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்ட விதம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. எனினும் அதுபற்றி மத்திய செயற்குழுவின் கூட்டத்தில் ஆராயவும் – அதன் பின்னர் நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அதிக நேரம் விவாதிக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அடைந்த தோல்வி பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டது. சுமந்திரனும் சிறீதரனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் குறித்து ஒரு பிடி பிடித்தே ஓய்ந்தனர். அவர் விருப்பு வாக்குக்காக நடந்து கொண்ட கீழ்த்தரமான செயற்பாடுகள் தொடர்பிலும் அவரின் பத்திரிகையில் சக வேட்பாளர்கள் தொடர்பில் பிரசுரித்த செய்திகள் தொடர்பிலும் முக்கியமாக தமக்கு எதிராக அவர் செய்தவை தொடர்பில் சுமந்திரனும் சிறீதரனும் அதிகம் பிரஸ்தாபித்திருந்தனர்.

இது விடயம் குறித்து மாவை சேனாதிராசாவோ, சம்பந்தனோ அதிகம் பேசவில்லை. எனினும் அவர் மீது நடடிக்கை எடுப்பது குறித்து சிந்திப்பதாகத் தெரிவித்தனர். இது சுமந்திரன் தரப்பை திருப்தி செய்யாத போதிலும், அமைதி காத்தனர்.

இறுதியாக தமிழரசுக் கட்சியின் தோல்வி குறித்து ஆராய சுயாதீன குழு ஒன்றை நிறுவுவது என்று முடிவு எட்டப்பட்டு அதுபற்றியும் அதிகம் உரையாடினர்.